அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் (ஞானவேல்) ஒன்றை, பார்வதிதேவி ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம் தான் ‘தைப்பூசம்’ என்று அழைக்கப்படுகிறது. எனவே தைப்பூச தினமான இன்று அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்கள், சிவன்கோயில்கள், அம்மன் கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், முருகன் கோயில்களை நோக்கி பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.. பால்குடம், காவடி எடுத்து திரளாக கோயிலுக்கு பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்களின் வசதிகளுக்காக கோயில்களில் சிறப்பு வரிசைகளும், சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி காலை 7.30 சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் முருகன் கோயில்களை நோக்கி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை முருகன் கோயில்களில் செலுத்தி வருகின்றனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் திருக்கோயில் கடலில் புனித நீராடியும், அங்க பிரதட்சணம் எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.
பழனி முருகன் கோயிலுக்கு நேற்று இரவு முதல் பக்தர்கள் காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று காலையிலும் பாதயாத்திரை பக்தர்கள் பல்வேறு காவடிகளுடன் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் பழனி நகரம் எங்கு பார்த்தாலும் முருகபக்தர்கள் தலைகளாகவே காட்சி அளிக்கிறது. பழனியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுவதால் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் முந்தி சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் வேதனைக்கு உள்ளானார்கள்.
திருச்சி அடுத்த வயலூர் முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதிகாலை முதல் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.