நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, ஆலோசனை நடைபெற்றது . தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் , தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது. கமல்ஹாசனின் சிந்தனைகளோடும் , கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணியில் இணைவோம் .
மேற்கண்ட 2 நிபந்தனைகளோடு ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.