திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 84. தமிழ்நாடு அரசுப் பணியாளாராக இருந்த இவர், டிஎன்ஜிஓ எனும் அரசுப் பணியாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர்.
சமூக ஊடகக் காலகட்டத்திலும் வயது முதுமையையும் பொருட்படுத்தாமல் சமகால அரசியல், சமூக நடப்புகளை கவனித்தும் கருத்துத் தெரிவித்தும் வந்தார்.
நேற்றுமுன்தினம் சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்றபோது, அமைச்சர் உதயநிதி இவர் எழுதிய மானம்- மானுடம்- பெரியார் எனும் புத்தகத்தைத்தான் கொடுத்து வரவேற்றார். அதைப் பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவுக்கரசு மகிழ்ச்சியுடன் பதிவுசெய்திருந்தார்.
அதையடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பதிவே அவருக்கு அஞ்சலிப் பதிவாகிப் போனது, திராவிடர் கழகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் உடல் கடலூரில் உள்ள அவரின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய் மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்படும் என்று தி.க. சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.