அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது. இதில் நேற்று 4-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், அ.தி.மு.க. தொடங்கிய வரலாற்றை குறிப்பிட்டு தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
இன்று 5 வது நாளாக விசாரணையின் போது அதிமுக கட்சி சார்பாக சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடினார்.அப்போது அவர், ஜனநாயக அடிப்படையில், பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியைச் செயல்படாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் தற்போது பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது பொதுக்குழு விவகாரத்தில் அனைத்தும் உரிய நடைமுறைப்படி தான் நடைபெற்றது, எனவே அதனை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்று உத்தரவு பிறப்பித்தது என வாதாடினார் பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரிலேயே அவர் நீக்கப்பட்டார் என கட்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் சார்பில் வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார். அவரது வாதம் முடிந்த நிலையில் மதிய உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின்னர் மீண்டும் 2மணிக்கு விவாதம் தொடங்கியது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்ததில் எந்தவித அடிப்படையும் இல்லை. தேர்தல் ஆணைத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில் இரு பதவிகளுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. கட்சி பதவி தேர்தலை இருவரும்சேர்ந்தே அறிவித்தனர். இருவரும் இணைந்து செயல்பட்டதில் ஜூன் 22 வரை எந்தவித பிரச்னையும் இல்லை. ஜூன் 23ம் தேதிக்கு பின்னர்தான் பிரச்னை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தொடங்கினார். தீர்மானம் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கலாம், ஆனால் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என கோர்ட் உத்தரவிட்ட பிறகும் தீா்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஜூலை 11 பொதுக்குபவில் ஓபிஎஸ்சை யும் சில பொதுக்குழு உறுப்பினர்களையும் கட்சியை விட்டு நீக்கி உள்ளனர். கட்சியின் செயல்பாட்டுக்கு எடப்பாடி தான் முட்டுக்கட்டை ஏற்படுத்தி உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு விவகாரத்தில் எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. சிவில் வழக்கை ஆண்டு கணக்கில் நடத்துவதற்கு பதிலாக சுமூகமாக பேசி தீர்க்க வாய்ப்பு உள்ளது. அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் இந்த யோசனையை நான் முன்வைக்கிறேன்.
சென்னை தனி நீதிபதி கூறியது போல இருவரும் இணைந்து செயல்படாவிட்டால் என்ன செய்வது என அப்போது நீதிபதிகள்கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த வைரமுத்து தரப்பு வழக்கறிஞர், ஒற்றை தலைமை விவகாரத்திற்கு அடிப்படை உறுப்பினர்களைக்கொண்டு தீர்வு காணலாம்.
இந்த யோசனைக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் உள்ளனவா என நீதிபதிகள் கேட்டனர்.
அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுக்குழு உறுப்பினர்களைக்கொண்டு தீர்வு காணலாம் என அதற்கு எடப்பாடி தரப்பு பதில் அளித்தது.
கட்சியின் பிரச்னைகளை தீர்க்க அனைத்து பதவிகளுக்கும் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று வைரமுத்து தரப்பும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் அடிப்படை உறுப்பினர்களைக்கொண்டு தேர்தல் நடத்தலாம் என ஓபிஎஸ் தரப்பும் பதில் அளித்தது. தொடர்ந்து நடந்த வாதம் மாலை 3.20 மணிக்கு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து3 நாட்களுக்குள், அதாவது வரும் 16ம் தேதிக்குள் எழுத்து பூர்வமான வாதங்களை அனைவரும் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குப மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.