தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இதன் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மாலை 4 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு 4.50 மணிக்கு வருகிறார். அங்கிருந்து நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகிறார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கேலோ இந்தியா தொடக்க விழாவை முடித்துக் கொண்டு இரவு7.45 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் பிரதமர், இரவு அங்கு தங்குகிறார். நாளை (ஜன.20) காலை 9 மணிக்கு திருச்சி க்கு விமானம் மூலம் செல்லும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் செல்கிறார். இதற்காக கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கும் பிரதமர் சுமார் 1 மணியளவில் ஹெலிகாப்டரில் ராமேசுவரம் செல்கிறார். நாளை மாலை ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யும் பிரதமர் மோடி நாளை இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். மறுநாள் (ஜன.21) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில்புனிதநீராடும் பிரதமர் மோடி,பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு, ஹெலிகாப்டரில் மதுரை வந்து அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டில்லி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டுசென்னையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம், விமான நிலையம், ஆளுநர் மாளிகை உட்பட பிரதமர் செல்லும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிமாக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய சாலைகள், சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா தொடக்க விழா நடைபெறும் பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் பிரதமர் காரில் செல்ல உள்ள ஐஎன்எஸ் அடையாறு – நேரு உள்விளையாட்டு அரங்கம் – ஆளுநர்மாளிகை இடையிலான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினரும் (எஸ்பிஜி) பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.