திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே கல்லகத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார. ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புள்ளம்பாடி அருகே கல்லகம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் 39 வயதான பாலகிருஷ்ணன்.இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கல்லகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த போட்டியை காண வந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணனை ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் படுக்காயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் கைவிட்டனர்.
பின்னர் எந்த அனுமதியும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய கல்லகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜு, ராமலிங்கம், சிவகுமார், பிச்சைமணி,செல்வகுமார்,பன்னீர்செல்வம், செல்லத்துரை, முரசொலி மாறன் மற்றும் சில பேர் மீது கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.