jதமிழ்நாடு கவர்னர் ரவி சட்டசபையில் உரையாற்றும் போது தமிழ்நாடு என்ற வார்த்தையையும், தலைவர்களின் பெயரையும் தவிர்த்து விட்டு படித்தது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சட்டசபையில் நடந்த விவகாரம் பற்றி ஜனாதிபதியிடம் விளக்க சந்திக்க திமுக முயற்சி செய்து வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் பிரச்னைசெய்து வரும் கவர்னர் ரவியின் போக்கு மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக கூறப்படுகிறது. வட மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் சில சீட்டுகள் பெற பா.ஜ.க. முயன்று வரும் நிலையில் தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ரவி கூறியது பா.ஜ.கவுக்கு பெரும் தலைவலியாக கருதப்படுகிறது.
எனவே ரவியை டில்லி அழைத்து சில ஆலோசனைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பொங்கல் முடிந்ததும் ரவி டில்லி செல்வார் என தெரிகிறது. அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தெரிகிறது.