விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதல்களை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுக்க விமானங்கள் தாமதம் ஆகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மூன்று மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஆகும் பயணங்களை தானாக ரத்து செய்ய வேண்டும் என்று இதில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுக்க பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. தென்னிந்தியாவில் போகி + பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம் ஆகின. வடஇந்தியாவில் விடாத பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம் ஆகின. விமானங்களை ரத்து செய்தல் மற்றும் விமானங்களில் தாமதம் காரணமாக பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இருப்பினும், விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில், இந்த விதிகளை தளர்த்திக்கொள்ளலாம் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் தாமதங்கள் தொடர்பான துல்லியமான நிகழ்நேர தகவலை வெளியிட வேண்டும், விமானத்தின் அந்தந்த இணையதள பக்கங்களில் அவை வெளியிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு SMS/WhatsApp மற்றும் மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட வேண்டும். விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு விமான தாமதங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைக் அளிக்க வேண்டும். மற்றும் விமான நிலையங்களில் உள்ள விமான ஊழியர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும்.
இந்தியா முழுக்க பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. முக்கியமாக பனிமூட்டம் காரணமாக டெல்லியில் அதிக அளவில் விமானங்கள் இயங்க முடியாமல் போய் உள்ளன. டெல்லியில் நேற்று கடுமையான பனிமூட்டம் நிலவியதால் பல விமானங்கள் தாமதம் ஆனது. டெல்லியில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன. இதனால், பயணிகள் பலரும் விமானம் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியதால் டெல்லி விமான நிலையத்தில் ஒருவித பரபரப்பான சூழலே காணப்பட்டது. அதே நேரம் சில பயணிகள் டெல்லி விமான நிலையத்தின் செக் இன் கவுண்டர்களுக்கு சென்று எப்போதுதான் விமானம் புறப்படும் என விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்தனர்.
இந்த நிலையில், மும்பை விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் அருகே இருந்து பயணிகள் இரவு உணவு சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் அதில் கூறியிருந்தாவது:- 12 மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டதால் கோவா – டெல்லி இண்டிகோ விமான பயணிகள் இண்டிகோ விமானம் அருகே இருந்து டின்னர் சாப்பிடுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூபாய் 1.20 கோடி ரூபாய் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.
இது போக டிஜிசிஏ (சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல்) மும்பையில் உள்ள சிஎஸ்எம்ஐ விமான நிலையத்திற்கு (எம்ஐஏஎல்) ரூ. 60 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.
இது போக சென்னையில் விமான சேவை கடுமையான பாதிப்பு அடைந்தது. பனி மற்றும் போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்பு அடைந்தது. ஓடுதளம் தெரியாத அளவிற்கு சாலைகளில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. ஹைதராபாத் விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
இதேபோல் இண்டிகோ விமானம் பல மணி நேரம் தாமதம் ஆனதால் பயணி ஒருவர் விமானியை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானியை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் விமானிகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.