பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல வீதியில் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு வரிசையாக ஐந்துக்கு ஐந்து அடி அளவில் பெண்கள் பாரம்பரிய முறைப்படி புள்ளிக் கோலங்களைப் போட்டனர்.
நடுவர்களாக வீ பாரம், இன்னர்வீல் சங்கம், குந்தவை ரோட்டரி சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் செயல்பட்டு கோலங்களை பார்வையிட்டனர். பின்னர் சிறந்த கோலங்களைத் தேர்வு செய்தனர். இந்த கோலப்போட்டியில் செவ்வப்பநாயக்கன் வாரியைச் சேர்ந்த சாந்தி, கருப்பூர் யுவஸ்ரீ, மகர்நோன்புசாவடி கவிதா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.
மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட கலெக்டரின் மனைவி சூசன் ஜேக்கப் வழங்கினார்.
இதில் மாமன்ற உறுப்பினர் ஏ. சசிகலா, பாம்பே ஸ்வீட்ஸ் பிரதீப், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.