உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி 11நாள் விரதம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் அவர் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் வருகிற 20ம் தேதி(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பிரதமர் ஶ்ரீரங்கம் வருகிறார். இங்கு ரெங்கநாதரை பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். அத்துடன் அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று தரிசனம்
செய்கிறார். 108 வைணவத்தலங்களில் ஶ்ரீரங்கம் முதன்மையானது என்பதால் இங்கு வந்து விட்டு அயோத்தி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.
பிரதமர் மோடியை வரவேற்கவும், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை செய்யவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகைள மேற்கொண்டு உள்ளது. முக்கியமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழக போலீசார் நடவடிக்கைகளை ெதாடங்கி விட்டனர். ஶ்ரீரங்கம் கோயில் மற்றும் அதனையொட்டியுள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் பற்றிய கணக்கெடுப்பு பணிகளை இன்று காலை போலீசார் தொடங்கினர்.
போலீசார் வீடு வீடாக சென்ற குடும்ப தலைவர் யார், என்ன தொழில் செய்கிறார், அவரது ஆதார் கார்டு, போன் நம்பர் போன்றவற்றை சேகரித்தனர். அத்துடன் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள், படிக்கிறார்களா, வேலை செய்கிறார்கள், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் யாரும் இருக்கிறார்களா?
20ம் தேதிக்குள் உங்கள் வீட்டுக்கு வேறு நபர்கள் யாரும் வர உள்ளார்களா என்பது போன்ற விவரங்களை சேகரித்தனர். இதுபோல ஆட்டோ ஓட்டுநர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என அனைவரிடமும் விவரங்களை சேகரித்தனர்.
பிரதமர் வரும் தினத்தில் இவர்களுக்கு ஐடி கார்டு கொடுக்கப்படும். அந்த கார்டு உள்ளவர்கள் மட்டுமே அன்றைய தினம் வீதிகளுக்கு வர முடியும். 20ம் தேதி யாருக்காவது அவசர உதவி தேவைப்பட்டால் எந்த போன் எண்ணை
தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களையும் போலீசார் தெரிவித்தனர்.
அத்துடன் ஶ்ரீரங்கம் கோயில் பிரகாரங்களில் கடைகள், பிரசாத கடைகள், புத்தக கடைகள் என பல விதமான கடைகள் உள்ளன. அந்த கடைகளில் உள்ளவர்களிடமும் போலீசார் விசாரித்தனர். அதைத்தொடர்ந்து இன்று முதல் கடைகளை மூடும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. நாளை முதல் சனிக்கிழமை மாலை வரை கோயிலில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். கோயிலை சுற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து இன்று விமான நிலையம் மற்றும் திருவரங்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திலும் போலீசார், வருவாய்த்துறை, அறநிலையத்துறை, விமான போக்குவரத்து துறை , உள்ளிட்ட அனைத்து துறை உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.