Skip to content
Home » நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

  • by Senthil

பொங்கல் விழா தமிழகத்தை பொறுத்தவரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.  முதல் நாள் போகி, மறுநாள்  பொங்கல், 3ம் நாள் மாட்டுப்பொங்கல், 4ம் நாள்  காணும் பொங்கல் என வகைப்படுத்தி  மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

காணும் பொங்கல் தினத்தில் மக்கள்  வெளியிடங்களுக்கு செல்வது வழக்கம்,  காலையிலேயே  குழந்தைகளுடன் சுற்றுலா தலங்களுக்கு கிளம்பி விடுவார்கள்.  பூங்கா, கடற்கரை,  மிருக காட்சி சாலைகள்,  கோயில்கள் என வெளியிடங்களுக்கு சென்று விட்டு மாலையில், அல்லது இரவில் தான் வீடு  திரும்புவார்கள்.

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால்  திருச்சி,  கரூர்,  புதுக்கோட்டை மக்கள் அருகில் உள்ள  ஒரே சுற்றலா தலமான முக்கொம்புக்கு தான் வருவார்கள்.   அகண்ட காவிரியாக வரும் காவிரி, இந்த இடத்தில் தான் கொள்ளிடமாக பிறக்கிறது. இந்த இடத்தில்  தான் முக்கொம்பு பூங்கா அமைந்துள்ளது.காவிரி, கொள்ளிடம், புள்ளம்பாடி வாய்க்கால் என  3 ஆக காவிரி இந்த இடத்தில் பிரிவதால் இதற்கு முக்கொம்பு என  பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

காவிரியில் தண்ணீர் பெருகி வரும் காலங்களில்  காவிரி,  கொள்ளிடத்தை ரசிக்க இங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.  அத்துடன்  பொழுது போக்கு அம்சங்களுடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது.  குழந்தைகளுக்கான ரயில், ராட்டினம்,  சறுக்கு விளையாடுதல், தண்ணீர் விளையாட்டு என பல்வேறு  பொழுது போக்கு அம்சங்கள், விளைாயட்டு சாதனங்கள்  இடம் பெற்றிருந்தது.

ஆனால் இப்போது இந்த பூங்காவில் எந்த விளையாட்டு சாதனங்களும் சரியான நிலையில் இல்லை. அனைத்தும் உடைந்தும், பழுதுபட்டும் கிடக்கிறது.  அத்துடன்  எந்தவிதமான புதிய செடிகொடிகளும் அங்கு

காணப்படவில்லை.  ஜனவரி மாதத்திலேயே பூங்கா  கோடை காலம்  போல வறட்சியுடன் காணப்படுகிறது. பச்சைப்பசேல் என ஒரு  புதிய வகை  செடியோ, மரேமா அங்கு இல்லை.  அதாவது பூங்காவை யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது.

20க்கும் மேற்பட்ட  நாய்களும்,  100க்கும் மேற்பட்ட குரங்குகளும் அங்கு சுற்றித் திரிகின்றன.  யாராவது அங்கு  வந்தால் அவர்களது வாகனங்களை  இவை பின் தொடர்கின்றன. குழந்தைகள் கையில் தின்பண்டங்கள் வைத்திருந்தால்  குரங்குகள் பறித்துக்கொண்டு ஓடுகிறது. இத்தனைக்கும் வார விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் மக்கள் அதிக அளவில் இங்கு வந்து தான் செல்கிறார்கள்.

நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த பூங்காவில் சுற்றுலாத்துறை மூலம்  பொழுது போக்கு அம்சங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த துறைகள்  பூங்காவுக்கு எதையும் செய்ததாக தெரியவில்லை என இங்கு சுற்றுலா வரும் மக்கள்  வேதனையினை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் தான் நாளை காணும் பொங்கலுக்கு மக்கள் இங்கு வர இருக்கிறார்கள். திருச்சியில்  சுற்றுலா அதிகாரியும் செயல்படுகிறார். வழக்கமாக    திருவரங்கம்  வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 2 நாட்கள் சுற்றுலாத்துறை மூலம் நாட்டிய நிகழ்ச்சி நடத்துவார்கள்.  அத்தோடு சுற்றுலா அலுவலரின் பணி முடிந்து விடுகிறது. ஒரு நாளாவது அவர்  முக்கொம்பு சென்று  அந்த பூங்காவை பார்த்து அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால்  திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த ஆட்சியில் திருச்சியிலேயே சுற்றுலாத்துறை அமைச்சர் இருந்தார். அப்படியிருந்தும் முக்கொம்பு கவனிப்பாரின்றி தான் இருந்தது. இப்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.    பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு  நெருங்குவதால் இந்த மாதத்தில் பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுலா செல்வார்கள்,  அதன் பிறகு கோடை காலத்திலும் மக்கள் பூங்காவுக்கு அதிக அளவில் வருவார்கள். எனவே இந்த பூங்காவை பேணி சீரமைக்க வேண்டும் என்பதே இங்கு சுற்றுலா வரும் மக்களின்  விருப்பமாக உள்ளது. முக்கொம்பு  பூங்காவுக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை. ?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!