பொங்கல் விழாவை சிறப்பிக்கும் அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதிலும் மதுரை ஜல்லிக்கட்டுக்கு தனி சிறப்பு உண்டு. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்று காலை மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி , கலெக்டர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன், 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தனர். இதில் 1,000காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் 106 காளைகள் களம் இறக்கப்பட்டன. இதில்18 காளைகளே அடக்கப்பட்டன. மற்ற காளைகளை வீரர்களை சிதறவிட்டு ஆட்டம் காட்டின. போட்டியின் விதிகளை மீறிய வீரர்கள் 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் சின்னப்பட்டி தமிழரசன் 3 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். தலா 2 காளைகளை அடக்கிய 2 வீரர்கள் 2ம் இடத்தில் உள்ளனர்.
முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 6 வீரர்களுடன் 2ம் சுற்றுப்போட்டியும் தொடங்கியது. 2ம் சுற்றும் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு , அண்டா உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு போட்டி முடிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்படும்.
போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, வாடிவாசல், பார்வையாளர் மாடத்தில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பல்லாயிரகணக்கான மக்கள் போட்டியை காண திரண்டுள்ளனர். 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மைதானம் முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.