திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல, வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவரும் அவருடன் பயிலும் 2 மாணவர்களும் தோழர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த 6ம் தேதி மாலை பட்டியல் இன மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப்படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்துள்ளனர்.
அவர்கள் தங்களின் தேர்வுகள் தொடர்பாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மாணவர்கள் குளிர்பானம் அருந்தியுள்ளனர். அதில், பட்டியல் இன மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதை அவர் தெரியாமல் குடித்துவிட்டதாகவும் தெரிகிறது.
மறுநாள் மற்ற இரு மாணவர்களும் நேற்று நீ குடித்த பானத்தில் சிறுநீர் கலந்து இருந்தது என கூறி உள்ளனர். இதனால் அவருக்கு அவமானமாக போய்விட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் 10ம் தேதி சட்டப்பள்ளி பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார். அதில் 2 மாணவர்கள் தனக்கு சிறுநீர் கலந்து பானத்தை கொடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
சட்டப்பள்ளி விதிகளின்படி மாணவர் புகார் வந்தவுடனேயே, அதனை பாலகிருஷ்ணன் முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து உண்மையை கண்டறிய ஒரு குழுவையும் முதல்வர் அமைத்தார். அந்த குழுவில் உதவி பேராசிரியர்கள் உள்ளனர். 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை அவர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்து கொண்டு இருந்த சூழலில் பாதிக்கப்பட்ட மாணவர் புகாரை திரும்ப பெற முயன்றுள்ளார். ராகிங் என்ற பெயரில் புகார் கொடுத்து விட்டால் அதை திரும்ப பெற முடியாது என பதிவாளர் கூறியதுடன் விசாரணையை தொடர்ந்தனர்.
விடுதி காப்பாளர், மாணவர்கள், என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்கைள தெரிவித்து உள்ளனர். அவர்கள் குடித்தது எந்தவகையான பானம் என்பதே கேள்விக்குறி என சில மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்தால் அதன் சுவை எப்படி தெரியாமல் இருக்கும் என்ற கேள்வியையும் சில மாணவர்கள் எழுப்பி உள்ளனர். தற்போது சட்டப்பள்ளிக்கு பொங்கல் விடுமுறை உள்ளதால் மீண்டும் சட்டப்பள்ளி திறக்கப்படும்போது இந்த பிரச்னை குறித்து மேலும் தகவல் வெளியாகும் எனதெரிகிறது.
விசாரணை முடிவில் மாணவர் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகும் பட்சத்தில், அறிக்கை கிடைத்த 24 மணிநேரத்தில் சட்டப்பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.