பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சுசனா சேத்-வெங்கட்ராமன் தம்பதி. இருவரும் என்ஜினீயர்கள். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சுசனா சேத், கேரளாவை சேர்ந்த வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சுசனா சேத் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கி தொழில் அதிபராக வலம் வந்தார்.
இவர்களது மகன் சின்மய்(4). கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இருவரும் பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மகன் சின்மயை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று பார்க்க வெங்கட்ராமனுக்கு கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.
இதனால் கோபம் அடைந்த சுசனா சேத், தனது மகனை கடந்த 6-ந் தேதி கோவாவுக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தார். பின்னர் அவர் தனது மகனின் உடலை சூட்கேசில் வைத்து பெங்களூருவுக்கு காரில் எடுத்து வரும்போது போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் போலீஸ் காவல் முடிந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். அதேபோல் அவரது கணவர் வெங்கட்ராமனையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் போலீசார் சுசனா சேத்தையும், வெங்கட்ராமனையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது வெங்கட்ராமனும், சுசனா சேத்தும் ஒருவரையொருவர் சரமாரியாக திட்டி வசைபாடி உள்ளனர். மேலும் மகனின் சாவுக்கு நீ தான் காரணம் என்று வெங்கட்ராமனை நோக்கி சுசனா சேத் சரமாரியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. தனது மகனை கொன்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாத சுசனா சேத் தன்னுடைய கணவர் மீது காட்டிய கோபத்தை பார்த்து போலீசார் அதிர்ந்து போனார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் வெங்கட்ராமனை சுசனா சேத் தாக்கியதாகவும், அதையடுத்து இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், அவர்களை போலீசார் சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து இருவரது வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே சுசனா சேத் தனது மகனின் உடலை சூட்கேசில் வைத்து எடுத்து வந்த கார் சித்ரதுர்கா மாவட்டம் ஐமங்களா போலீஸ் நிலையத்தில் இருந்தது. அந்த காரை நேற்று கோவா போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி இன்று(திங்கட்கிழமை) மீண்டும் சுசனா சேத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள போலீசார் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.