6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 5 நகரங்களில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து இப்போட்டி தேசிய தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ள நிலையில் இதன் செய்தியையும் மற்றும் உணர்வையும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. சாய் விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியே நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.