நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். இவர் திமுகவை சேர்ந்தவர். இவரையும் சேர்த்து நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுக 4, காங்கிரஸ்2, திமுக கூட்டணி கட்சிகள் 4. மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் திமுகவில் 45 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர். 6 பேர் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள்.
இவர்களின் பெரும்பாலானவர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக 2 வருடமாக போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் மேயர் மீது அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றே திமுக கவுன்சிலர்கள் மதுரைக்கு இன்பசுற்றுலா சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பலத்த போலீஸ் காவலுடன் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. மேயர் சரவணன் வந்திருந்தார். ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான தாக்கரே சுபம் ஞானதேவராவ் மற்றும் சில அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் ஒரு கவுன்சிலர் கூட கூட்டத்துக்கு வரவில்லை. எனவே 30 நிமிடம் தாமதமாககூட்டம் தொடங்கியது. அப்போதும் ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை. குறைந்த பட்சம் 80 % கவுன்சிலர்கள்(44 பேர்) வந்திருந்தால் தான் விவாதத்தை தொடங்க முடியும். எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டதால், தீர்மானம் தோல்வி அடைந்ததாக பதிவு செய்யப்பட்டது. இதனை ஆணையர் தாக்கரே கவுன்சிலர் இல்லா மன்றத்தில் அறிவித்தார். இதன் மூலம் மேயர் சரவணன் பதவிக்கு ஆபத்தும் நீங்கியது. இனி ஒரு வருடத்திற்கு அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.