அயலகத் தமிழர் தின விழாவினை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.01.2024) தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் கீழக்கணவாய் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பார்வையிடும் வகையில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்வை பார்வையிட்டனர்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மூன்றாம் ஆண்டாக ”தமிழ் வெல்லும்” என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் இன்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக பேசி வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் து.முகேஷ்குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.