இந்தியா முழுவதும் இன்றைய பண்டிகை காலங்கள் மது இல்லாமல் கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மதுபானக்கடைகளை அரசே நடத்தி வருகிறது. இதனால், ஆண்டு தோறும் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து விற்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு விற்பனை கூடிக்கொண்டே செல்கிறது. அவ்வப்போது சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வாடிக்கை. அதன்படி இந்த ஜனவரி மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொங்கல் பண்டிகையின் போது டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.