மார்கழித் திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாள் அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியான கோட்டை சாலையில் அமைந்துள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியான இன்று லட்சத்து 8 வடை மாலைகள் சாத்தப்பட்டது.
சரியாக அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு லட்சத்து 8 வடை மாலை சகிதம் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஆஞ்சநேயர். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று பிற்பகலில் பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
முன்னதாக, ஆஞ்சநேயருக்கு சாத்துவதற்கான வடைகளை தயாரிக்கும் பணியில் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 35 பேர் ஈடுபட்டனர். 2,050 கிலோ உளுந்து மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவற்றைக் கொண்டு வடைகள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், தமிழகம் முழுவது உள்ள ஆஞ்சேநேயர் ஆலயங்கள் மற்றும் வைணவ ஆலயங்களில் அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.