அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்திவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், தனது நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றுதான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நிறைவடைந்திருந்த நிலையில், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நீதிபதிகள் மறுத்தனர். மேலும், ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனிநீதிபதியிடம் மீண்டும் முறையிட அறிவுறுத்தினர்.