*கரூரில் பெண்மணி இறப்பில் மர்மம் நீடிப்பதாகவும், குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக எஸ்.பி அலுலகத்தில் புகாரளித்த கிராம மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பேட்டி.*
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 43). இவரது மனைவி தனலட்சுமி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தனலட்சுமி மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பணி முடித்து விட்டு வழக்கம் போல், வெங்கடாபுரம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மாலை 4:30 மணியளவில் விளக்கு போட சென்றுள்ளார். இரவு நேரமாகியும் தனலட்சுமி வீடு திரும்பவில்லை என்பதால், உறவினர்கள் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் காணாமல் போன தனலட்சுமி வெள்ளியணை அடுத்த ஒத்தையூர் கிராமத்திற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்ததை ஊர் பொதுமக்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், தனலட்சுமி சாமி கும்பிட சென்ற மாரியம்மன் கோவிலுக்கு முன்பு செல்போன், ஆவணங்களுடன் இருசக்கர வாகனம் (XL) அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதனையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தனலட்சுமி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை மீட்க வந்த தீயணைப்பு வாகனத்தை, உறவினர்கள் மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தன் பெயரில் போராட்டத்தை முடித்துக் கொண்டதுடன், தனலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்று அடக்கம் செய்தனர்.
மூன்று மாதகாலமாகியும் போலீசார் குற்றவாளியை கண்டு பிடிக்கவில்லை என்றும், தங்களுக்கு கோவில் பூசாரி மீது சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க போலீசார் மறுப்பதாக குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய கிராம மக்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு புகாரளிக்க குவிந்தனர். மனு வழங்க வந்த கிராம மக்களை நேரில் சந்தித்து விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் விரைவில் விசாரணையை முடித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வெள்ளியணையில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.