மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்கிற பூரணம். இவரது கணவர் உக்கிர பாண்டியன், மகள் ஜனனி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தனர். அரசு வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் பூரணத்திற்கு சொந்தமான 1.52 ஏக்கர் நிலம், கொடிக்குளம் பகுதியில் உள்ளது. இந்நிலையில், தனது நிலத்தை அந்த கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தானமாக வழங்கியுள்ளார். நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி என கூறப்படுகிறது. மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுக்கு தான பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார் பூரணம்.
இந்த நிலப் பத்திரத்தை முறையாக மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக்கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்து ராணி முன்னிலையில், பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர். சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை கல்விப் பணிக்காக தானம் வழங்கிய பூரணம், அதனை பொது வெளியில் அறிவிக்கவும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை, கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூரணத்திற்கு, பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.