தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). டிப்ளேமோ படித்துள்ளார். ஐஸ்வர்யா, நவீன் இருவரும் பள்ளி பருவ காலத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் திருப்பூர் அரவப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்
அங்கும் இவர்கள் காதல் தொடர்ந்த நிலையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் காதலர்கள் திருமணம் செய்து கொண்டு வீரபாண்டி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தினர். திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.
இதை பார்த்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் திருப்பூர் மாவட்டம் சென்று பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி பல்லடம் போலீசார் ஐஸ்வர்யாவை அவரது தந்தை யுடன் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசாரிடம் நவீன் கேட்டபோது ஐஸ்வர்யாவின் தந்தை அவரை காணவில்லை என புகார் அளித்த நிலையில் அவரை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்கிறார்கள். நீ அவர்கள் கண்ணில்பட்டால் அடித்து விடுவார்கள் என போலீசார் நவீனை மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் துன்புறுத்தி கொலை
செய்து எரித்து விட்டதாக நவீன் நண்பர்கள் அவருக்கு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நெய்விடுதி, பூவாளூர் கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆசிஷ்ராவத் நெய்வவிடுதியில் உள்ள இடுகாட்டில் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு நடத்தினார். மேலும் இது குறித்து நவீன்
வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பெருமாளை தேடி வந்தனர். இந்நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் அப்பா பெருமாள், அம்மா ரோஜா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.