காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், பென்சனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துகழக தொழிற்சங்கத்தினர் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கத்தினர் உள்பட சில அமைப்புகள் சேர்ந்து நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்நாட்டில் நேற்று 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை, இதனால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள் என கூறினர். அதே நேரத்தில் அரசு சார்பில் 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அறிவித்தனர்.
பொதுவாக கிராமப்புறங்களில் பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் 30% வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2ம்நாள் ஸ்டிரைக் நடக்கிறது. நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் இன்றும் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். எனவே நேற்றைய நிலைதான் இன்றும் தொடர்கிறது.
காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்வோா், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக டவுன் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. போதிய பஸ்கள் இல்லாததால் தாமதமாக வரும் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணித்தனர். பஸ்கள் ஏற்கனவே பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் சில நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் சென்றன. இதுவும் பயணிகளை எரிச்சல் அடைய செய்தது.
அதே நேரத்தில் ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவு இயக்கப்பட்டாலும் காலை நேர போக்குவரத்தை சமாளிக்க முடியவில்லை. மினி பஸ்களும் ஆங்காங்கே இயக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள். சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
அதே நேரத்தில் தனியார் பஸ்கள் வழக்கம் போலவே இயக்கப்படுகிறது. கூடுதலாக தனியார் பஸ்கள் இன்னும் வரவழைக்கப்படவில்லை. வழக்கம் போல இயங்கும் தனியார் பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. அரசு பஸ்களை ஓய்வு பெற்றவர்களைக்கொண்டும், தனியார் டிரைவர்களை அழைத்தும் அரசு இயக்கி வருகிறது.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வழக்கமாக தஞ்சை மார்க்கமாக செல்லும் பிளாட்பாரத்தில் பஸ்கள் அணிவகுத்து நிற்கும். ஆனால் இன்று அந்த அளவு பஸ்களை காணமுடியவில்லை. சில பஸ்களே இயக்கப்பட்டன. இது போல மற்ற மார்க்கங்களில் இயக்கப்பட்ட பஸ்களும் குறைந்த அளவே காணப்பட்டது. சத்திரம் பஸ் நிலையத்திலும் டவுன் பஸ்கள் இடிபாடுகளுடன் போட்டிபோட்டு செல்லும் இன்றும் டவுன் பஸ் நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது.