அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரியும் உள்ளனர். இவரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் இவரின் தந்தையின் பெயரில் வங்கியில் 20 சவரன் நகை அடமானத்தில் உள்ளது. இந்த நகையை மீட்பதற்காக வாரிசு சான்றிதழ் வாங்கி தரக் கோரி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை அன்பழகன் நாடியுள்ளார். தனது சகோதரர்களின் பெயரை மறைத்து எனது தந்தைக்கு நான் மட்டும் வாரிசு என்பது போல் வாரிசு சான்றிதழ் வாங்கி தர கோரி உள்ளார். இதனையடுத்து சங்கர் இலையூர் மேற்கில் கிராம நிர்வாக அலுவலராக உள்ள தெற்கு புதுக்குடியை சேர்ந்த குருநாதன் என்பவரிடம் அன்பழகனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி உள்ளார். அப்போது அன்பழகனுக்கு சகோதரர்கள் இருக்கும் போது அவர் பெயரில் மட்டும் வாரிசு சான்றிதழ் வழங்க முடியாது என கிராம நிர்வாக அலுவலர் கூறியதால் ஆத்திரமடைந்த சங்கர் சராமாரியாக கிராம நிர்வாக அலுவலரை தாக்கியுள்ளார். இதில் ஒரு கை இல்லாத படுகாயம் அடைந்த மாற்றுத்திறனாளியான குருநாதனை (கிராம நிர்வாக அலுவலர்) அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரை தாக்கி விட்டு தப்பி ஓடி தலைமறைவான சங்கர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.