தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை பணிமனையில் 82 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தொடர்ந்து இது குறித்து மயிலாடுதுறை போக்குவரத்து பணிமனையில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார் . மேலும் பேருந்துகள் இயக்கம் குறித்து அங்கிருந்த மேலாளர் கபிலனிடம் கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை பேருந்து பணிமனையில் 156 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ள நிலையில் 12 மணி நிலவரப்படி தற்போது வரை 19 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 70 பேருந்துகளில் தற்போது 56 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் , ஐந்து பேருந்துகள் இரவு பெருநகரங்களுக்கு செல்ல உள்ளதாகவும் மீதமுள்ள 9 பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர பேருந்துகள் 37 உள்ள நிலையில் அதில் 34 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.