சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், முத்துசாமி, அன்பில் மகேஷ், கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இனியோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மற்றும் பாதிரியார்கள், அருட் சகோதரிகள் மத போதகர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட மாடல் அரசு சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதில் எப்போதும் கவனமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கரூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச்சங்கம் கூடுதலாக துவங்க நிதி ஒதுக்கப்பட்டது.
ஜெருசலேமுக்கு புனிதப்பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனித்தீர்மானம் கொண்டு வந்து நாங்கள் நிறைவேற்றினோம்.
இனி வர உள்ள காலங்களில் உபதேசியார்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு அது இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப்பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
கிறிஸ்தவ கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு தற்போதுள்ள விதிகளை தளர்த்தி சவப்பெட்டியில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில் 12 மாதங்களுக்கு பிறகு வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்,
மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்கு பிறகு அதே குடும்பத்தை சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்,
உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் அதே குடும்பத்தை சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்தை இருப்பதை போல உடல்களை அடுக்கப்பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கும் ஆணையையும் இந்த வார இறுதிக்குள்ளாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பொருந்தும்.
கல்லறைத்தோட்டங்கள், கபர்ஸ்தான்கள் இல்லாத மாவட்ட தலைநகரங்களில் நலம் கையகப்படுத்தப்பட்டு மாநகராட்சி, நகராட்சி சார்பில் கல்லறைத்தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசின் நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுைமப்பெண் திட்டத்தில் சேர்த்த குறித்து பட்ஜெட்டில் நல்ல செய்தி வெளிவரும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம் விாிவாக்கம் குறித்தும் பட்ஜெட்டில் சாதகமாக பரிசீலிக்கப்படும்.
நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், போன்றவற்றுக்கு தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
பள்ளிக்கல்வித்துறையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைபள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதரப்பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வயது உச்சவரம்பு நிதிஉதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.
சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், யுஜிசி மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் மூன்று மாத காலத்துக்குள் நியமன அங்கீகாரம் அளிக்கப்படும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.