கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மூன்று நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அதன் விவரம் வருமாறு:
1972 முதல் 2017வரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே பொதுச்செயலாளரை தேர்வு செய்தனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அந்த பதவியில் இருந்தனர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை திருத்தும் அதிகாரம் உள்ளது. அதிமுகவில் 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு கிளையும் ஒரு செயலாளரை கொண்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானது போல பொதுக்குழு உறுப்பினர் பதவி காலாவதியாகவில்லை. கட்சிக்கு உயர் அதிகாரம் படைத்த குழு தேவை. அதிமுக ஜனநாயக கட்சியாக இயங்கி வருகிறது. கட்சிக்கு தலைமை ஏற்க 2017ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.2021ல் கட்சியின் விதி பொதுக்குழுவால் திருத்தப்படவில்லை. செயற்குழு திருத்தம் செய்தது. செயற்குழுவால் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது பொதுக்குழுவின் அங்கீகாரம் தேவை. இரட்டை தலைமையால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டதால் ஒற்றைத்தலைமை தேவை கட்சியின் நலன் அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகவேண்டும். பொதுக்குழுவுக்கு அதிகபட்ச அதிகாரம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு தவறு என்றால் ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு மட்டும் எப்படி சரியாகும்.?
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு ஜூன் 23ல் அறிவிக்கப்பட்டதை ஓபிஎஸ் ஒப்புகொள்கிறார்.கட்சியன் 5ம் விதி, அடிப்படை உறுப்பினரை வரையறுக்கிறது.பொதுக்குழுவின் முடிவை ஏற்பவரே அடிப்படை உறுப்பினர் என கட்சியின் 7ம் விதி கூறுகிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழு முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள்.பொதுக்குழுவை கூட்டவேண்டும் என 20 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தாலே பொதுக்குழு கூட்டவேண்டும். ஆனால் 82% பேர் பொதுக்குழுவை கூட்ட கோரிக்கை வைத்தனர்.
இவ்வாறு விவாதம் நடந்தபோது, பொதுக்குழுவில் எத்தனை பேர் கலந்து கொண்டனர்.என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு 150பேர் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். கட்சி முழுவதும் ஒரு திசையில் இயங்கும்போது, ஓபிஎஸ்சும், வைரமுத்துவும் வேறு திசையில் இயங்குகிறார்கள். இவர்களும் ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர் என்றனர்.
தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.