அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் அவ்வப்போது லேசான சாரல் மலையும் பெய்தது. இதனையடுத்து இரவு அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதனால் தெருக்கள் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் குளத்தூர் கிராமத்தில் பேருந்து பயணியர் காத்திருப்பு கட்டிடத்திற்கு எதிரே உள்ள நூறாண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் சாய்ந்து இன்று காலையில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது நூற்றாண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இம்மழையானது சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஒரு சில பகுதிகளில் மோட்டார் பாசனத்தை கொண்டு முன் நடவு செய்யப்பட்ட சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் அப்பகுதி விவசாயிகளுக்கு மழையானது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.