தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கடலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதலே சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த முறை மழை நீர் தேங்கிய பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ண ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலோடு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளும் விடுப்பு இன்றி களத்தில் நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.