மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் விடிய விடிய மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 22.08 செ.மீ. மழை பதிவானது. இது மாவட்டத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும். இந்த மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், செம்பனார்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி கிடக்கிறது. தொடர்ந்து மழை நீடித்தால் இந்த 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல்லும் வீணாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இது போல திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. அதிக மழை கொட்டியதால் திருவாரூர் விஜயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த கர்ப்பிணி தாய்மாா்கள் திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடை தொடங்கிய மறுநாளே கனமழை தொடங்கி விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இனி நிலம் காய்ந்து அறுவடை பணியை தொடங்க ஒரு வாரம் ஆகும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மயிலாடுதுறையில் இன்று காலை 6 மணிக்கு பின்னர் மழை ஓய்ந்தது போல இருந்தது. மீண்டும் 9 மணிக்கு மழை தொடங்கி அடைமழை போல கொட்டுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீ) வருமாறு:
மணல்மேடு 105.4 மில்லி மீட்டர்
சீர்காழி 235.6 மில்லி மீட்டர்
கொள்ளிடம்194.4 மி. மீட்டர்
தரங்கம்பாடி 92.4மி.மீ.
செம்பனார்கோயில்52.2மி.மீ.
திருவாரூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.,இதனால் இன்று திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.