திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவர். இவரது மனைவி பானுமதி(38). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது பானுமதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். வடிவேல் டிரைவர் வேலைக்கு செல்லாமல் தனது தம்பியுடன் சேர்ந்து ஹாலோ பிளாக் கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வந்தார். அதில் சரியான வருமானம் கிடைக்காததால் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார்.
கர்ப்பிணியான பானுமதி சில நாட்களுக்கு முன் கரூரில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதால் வடிவேல் மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி காலை நீண்டநேரமாகியும் வடிவேலின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது வடிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பெட்டவாய்த்தலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வடிவேலு தலையில் பலத்த காயம் இருந்ததால் வடிவேலு மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே யாராவது கொலை செய்து சடலத்தை தொங்கவிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். பானுமதிக்கும், குளித்தலை இனுங்கூரை சேர்ந்த முருகேசன் (எ) கருப்பசாமி(32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.. இது குறித்து தெரியவரவும் பானுமதியை வடிவேல் கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய பானுமதி திட்டம் தீட்டினார். இதற்காக கூலிப்படையை சேர்ந்த சீராத்தோப்பு அருண்(34), உறையூர் காவேரி நகர் சிராஜுதீன்(23) ஆகியோருக்கு ரூ. 1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தனர்.
புத்தாண்டு அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த வடிவேலுவிடம் தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் சென்ற கூலிப்படையினர் அருண், சிராஜுதீன் ஆகிய 2 பேரும் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் திடீரென தலையில் தாக்கினர். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த வடிவேலுவின் கழுத்தில் கயிற்றை கட்டி தூக்கில் தொங்க விட்டு விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து பானுமதி, அவரது கள்ளக்காதலன் கருப்பசாமி, கூலிப்படையை சேர்ந்த அருண், சிராஜுதீன் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.