அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், நெட்டலக்குறிச்சி நீதிவழித் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடைய மகன் சுசில்ராஜ் வயது (26/24) என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி சுசில்ராஜ்-ம் அவரின் கூட்டாளிகளும் சேர்ந்து ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆமணக்கந்தோண்டி பொன்னேரி கரையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதற்கான ஆயத்தத்தில் இருந்தபோது, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 04.12.2023-ந் தேதி கைது செய்யப்பட்ட சுசில்ராஜ் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் சுசில்ராஜ் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால், அவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ந.ராமராஜன் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லாவின் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா சுசில்ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி சுசில்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.