பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இவை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படும்.
இந்தாண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மற்றும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.
சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர அனைவருக்கும் டோக்கன்
வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கும் இந்த பொங்கல் டோக்கன் வழங்கப்படாது என்பதைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் காலை 9 மணிக்கு டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில், காலை 7:00 மணி முதல் பொதுமக்கள் காத்திருந்து டோக்கன்களை பெற்று செல்கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனில் குடும்பத் தலைவரின் பெயர், நியாய விலைக் கடையின் பெயர், வரிசை எண், விற்பனையாளர் கையெழுத்து உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
கரூர் மாவட்டத்தில் உள்ள 612 நியாய விலை கடைகளில் பட்டியல் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக ஒரு சில கடைகளில் டோக்கன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.