சென்னை ஓட்டேரி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் பேரில் சுமார் 770 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 770 கிலோ குட்கா பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் போலீசார் வைத்திருந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போவதாகவும், குட்கா பொருட்களை போலீசாரே எடுத்து விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள குட்கா பொருட்களை போலீசார் ஒருவர் எடுத்து சென்று காவல் நிலையத்தின் வெளியே நிற்கும் ஒரு நபரின் பையில் வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வெள்ள நிவாரண பணியின்போது போலீசாருக்கு உதவிய நபர்களுக்கு குட்கா பொருட்களை கொடுத்ததாக சம்பந்தப்பட்ட போலீசார் தெரிவித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள குட்கா பொருட்களை எடுத்ததால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.