சென்னை வண்ணாரப்பேட்டை ரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள். இவரது மகன் சரவணக்குமார் (31). பொறியாளராக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு வேலைக்கு செல்ல கம்பெனி பேருந்தில் ஏற நின்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கம்பெனிக்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின்னர், சஞ்ஜீவிராயன் கோயில் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு இசிஜி எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த டாக்டர், இசிஜியை பார்த்துவிட்டு உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, வாயு கோளாறுதான் என கூறியுள்ளார். மீண்டும் இசிஜியை பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என கூறி சரவணக்குமாருக்கு ஊசி போட்டுள்ளார். இதையடுத்து சரவணகுமாரின் உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம், அவரை அனுப்புங்கள் என கேட்டுள்ளனர். அப்போதும் அவருக்கு சாதாரண வலிதான். ஒன்றும் பிரச்னை இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என டாக்டர் நந்திவர்மன் கூறியுள்ளார். சிறிதுநேரத்தில் தூக்கத்திலேயே சரவணகுமார் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து சரவணகுமாரின் உறவினர்கள் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சரவணக்குமாருக்கு பினார்கான் என்ற மருந்து ஊசி போட்டது தெரியவந்தது. இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த மருந்து வழங்கக்கூடாது என டாக்டர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சென்னை பெருநகர 15வது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுதா, தீர்ப்பு வழங்கினார். இதில் நோயாளி சரவணகுமாருக்கு தகுந்த சிகிச்சை அளிக்காமல் கவன குறைவாக செயல்பட்ட டாக்டர் நந்திவர்மனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்கவேண்டும். நஷ்டஈடு வழங்க தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார்.