கரூர் காவிரி ஆற்றில் ஒப்பந்ததாரர் மூலம் லாரி மற்றும் மாட்டு வண்டியில் மணல் அள்ளப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதனால் வாழ்வாதாரம் பாதித்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாட்டு வண்டி
தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றங்கரையில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்லமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது நீர்வளத்துறை அதிகாரி மணல் அள்ளும் இடமானது அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு அளவீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த இடத்தில் தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாராம்சம் தெரிந்து கொண்ட பின்னரே மணல் அல்லுவது குறித்து தெரிவிக்கப்படும் என்று விளக்கம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதை ஏற்றுக்கொண்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.