ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய். எஸ்.ஆர். சர்மிளா, தெலங்கானா மாநிலத்தில், ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். கடந்த நவம்பர் மாதம் நடந்த தெலங்கானா சட்டமன்ற தேர்தலின்போது, இவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார். இந்த நிலையில் இன்று சர்மிளா, டில்லியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் முன்னிலையில் சர்மிளா காங்கிரசில் இணைந்ததுடன், தனது கட்சியையும் காங்கிரசில் இணைத்தார். காங்கிரசில் சேர்ந்தது குறித்து சர்மிளா கூறியதாவது:
” காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக விளங்குகிறது. அது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது” என்றார்.
வரும் மக்களவை தேர்தலில் சர்மிளா, காங்கிரஸ் கட்சி சார்பில் தெலங்கானாவில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்றும், கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் பேசப்படுகிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாஜகவுடன் நெருக்கமாக உள்ள நிலையில், அவரது சகோதரி காங்கிரசில் ஐக்கியமாகி இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. குடும்ப தகராறில் இவர் அண்ணனுக்கு எதிராக களம் இறங்கி உள்ளதாக ஆந்திரா, தெலங்கானா அரசியலில் பரபரப்புடன் பேசப்படுகிறது.