திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மேல கல் கண்டார் கோட்டைக்கு தனியார் பஸ் ஒன்று பொன்மலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பஸ்ஸின் படிக்கட்டில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாக பயணித்தனர். அந்த பஸ் பொன்மலை சி-டைப் மாரியம்மன் கோவில் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்றது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் இறங்குவதற்குள் பஸ்ஸை டிரைவர் இயக்கிவிட்டார். இதனால் அந்த பெண் தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
அவர் காயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் சில மாணவ மாணவிகளும் கீழே விழுந்தனர். படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலை இந்த பகுதியில் தினமும் பார்க்க முடிகிறது. எனவே காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ் வசதிகளை செய்ய வேண்டும். உடனடியாக இதனை போக்குவரத்து அலுவலர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பெரிய விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அந்த தனியார் பேருந்து இதே போன்று தினமும் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் செல்வதால் பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே இது தொடர்பாக போலீசாரும், போக்குவரத்து துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்கண்டார்கோட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.