சென்னை பெரம்பூர் அடுத்துள்ளது ஐசிஎப் பகுதி. இங்கு ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அதன் அருகிலேயே ரயில்வே அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து, நூறாண்டு பழமையான ரயில் உட்பட பல்வேறு மாதிரிகளைப் பார்வையிட்டுச் செல்வது வாடிக்கை. இங்கு ஆண் மற்றும் பெண் ரயில்வே காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் குந்திதேவி(34). ரயில்வே போலீஸான இவர் சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று சென்னை ஐசிஎப் அருங்காட்சியகத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை நேரம் அங்கிருந்த இரும்பு கேட்டை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, திடீரென இரும்பு கேட் சரிந்து, பணியிலிருந்த தேவி மீது விழுந்தது. இதில் அவரது இடுப்பு, கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஐசிஎப் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காகத் தேவி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஐசிஎப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.