தமிழக முழுவதும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டெஸ்ட் பர்சேஸ்க்கு எதிரான வாசகங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திருச்சி வெல்லமண்டி பழைய ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பாக ஓட்டினர். இந்த நிகழ்வில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு ஸ்டிக்கர்கள் ஒட்டினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வணிகவரித்துறையினர் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் கடைகளுக்கு அதிகாரிகள் சென்று தாங்களே பொருட்களை வாங்கிய பின்னர் அதற்குரிய வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர்.
குறிப்பாக சில்லறை வணிகர்கள் ஏற்கனவே வரி செலுத்தப்பட்ட பொருட்களை தான் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர் இந்நிலையில் வரி செலுத்தப்படவில்லை எனக் கூறி அபராதம் விதிக்கிறார்கள். இது வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலாகும் எனவே தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி முதற்கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வணிகவரி உயர் அதிகாரிகளிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திரண்டு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
அதேபோல் மண்டல மாநில அளவில் வணிகவரித்துறை அதிகாரிகளும் நேரடியாக சென்று டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. எனினும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை தற்போது வரை தொடர்வதால் வேறு வழி இன்றி அடுத்த கட்டமாக ரத்து செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் கடைகள் முன்பாக ஸ்டிக்கர்களை ஒட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.