தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் திறந்து வைத்தனர்…
அணையின் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் 60 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நொய்யல் பிரதான கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயில் 90 கன அடி வரை தண்ணீர் விடப்பட உள்ளது.
கீழ்பவானி அணைத்திட்ட பாசன நிலங்களில் இருந்து கிடைக்கும் கசிவுநீர் கீழ்பவானி வாய்க்கால் நொய்யல் ஆற்றைக் கடக்கும் பகுதியில் இருந்து முத்தூர் வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு நொய்யல் ஆற்றில் வடிகிறது.
இந்த கசிவுநீர் மற்றும் ஆற்றில் வரும் மழைநீரும் நொய்யல் ஆற்றில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம்,
சின்னமுத்தூர் அருகே உள்ள கதவணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து 10 கி.மீ நீளத்திற்கு கால்வாய் மூலம் கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், கார்வழி கிராமத்தில் அமைந்துள்ள இந்நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காக தேக்கப்படுகிறது.
தேக்கப்பட்ட நீர் பிரதான வாய்க்கால் மூலம் சென்று மொத்தம் 19480 ஏக்கர் புஞ்சை நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கிறது. இதன்மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகளூர், புஞ்சைதோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சைகடம்பக்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்கள் பயனடைகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்அப்புசாமி, கீழ்பவானி வடிநில உபகோட்டம் காங்கயம், பாசன பிரிவு க.பரமத்தி உதவி பொறியாளர் சதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.