மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வாணகிரி கடலில் இன்று காலை ஏதோ மர்ம பொருள் மிதந்து வந்தது. இதைப்பார்த்த மீனவர்கள் அதை கரைக்கு கொண்டு வந்தனர். அது வெள்ளை மற்றும் காவி கலரில் வட்ட வடிவில் இருந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல்படை போலீசார் அங்கு வந்து அந்த பொருளை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில் அது, சென்னை யில் உள்ள கடல் பற்றிய ஆராய்ச்சி செய்யும் மத்திய அரசுக்கு சொந்தமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓசன் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் இருந்து கடல் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ராமா போயா என்ற கருவி என தெரியவந்தது. இது குறித்து அந்த நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அதனை எடுத்து செல்வதாக கூறி உள்ளனர். இதன் உயரம் 3 அடி இருக்கும். சுற்றளவு 23 அடி. தற்போது அது வாணகிரி கிராமத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.