திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் திருச்சி வருகிறார். அத்துடன் ரூ.19,850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சி வருகிறார்.
பின்னர் அங்கிருந்து விவிஐபிக்கள் செல்லும் வழியாக வெளியே வந்து, அங்கிருந்து கார் மூலம் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு 10.30 மணியளவில் நடைபெறும் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகிறார். அங்கு நடைபெறும் விழாவில் புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடும் பிரதமர் மோடி, அந்த விழாவிலேயே பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார்.