Skip to content
Home » அடுத்த ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவோம்…. இஸ்ரோ தலைவர் பேட்டி

அடுத்த ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவோம்…. இஸ்ரோ தலைவர் பேட்டி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை பொதுமக்கள், மாணவ-மாணவியர் கண்டு களித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-* பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் பூமியிலிருந்து 650 கி.மீ புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு ஆய்வு பணியை தொடங்கியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எக்ஸ்போசாட்டின் இயக்கம் சிறப்பாக உள்ளது. இது மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று; இதில் பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோள் இடம் பெற்றுள்ளது. ககன்யான் தயார் நிலைக்கான ஆண்டாக 2024 இருக்கப் போகிறது. 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். இந்த ஆண்டில் (2024) 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் வரும் 6-ம் தேதி எல்1 புள்ளியை எட்டும், அதன்பிறகு இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *