சென்னை தி.நகரை சேர்ந்தவர் சிவதாசன் (46). இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில், 20 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் கானத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டிற்கு சென்றனர். பிறகு இவர்களில் 7 பேர் கானத்தூரில் தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் ஜாலியாக குளித்து மகிழ்ந்து விளையாடி உள்ளனர். அப்போது நவீன் (26), மானஸ் (18), பிரசாந்த் (18), நிவேதிதா (18) ஆகிய நான்கு பேர் திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி தத்தளித்துள்ளனர். சிறிது ேநரத்தில் அவர்கள் 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை கவனித்த சிவதாசன் தனது மகளான நிவேதிதாவை காப்பாற்றும் நோக்கத்தில் கடலுக்குள் இறங்கினார். ஆனால், அவரும் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதில், அதிர்ஷ்டவசமாக அவரது மகள் நிவேதிதா உயிருடன் கரை ஒதுங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்ததால் அவர் காப்பாற்றப்பட்டார்.
பின்னர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் ராட்சத அலையில் சிக்கி மாயமான மற்ற 4 பேரையும் தேடினர். இதில் சிவதாசன், நவீன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடலில் மூழ்கி மாயமான பிரசாந்த் மற்றும் மானஸ் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில், இருவர் சடலங்களையும் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கடலில் இருந்து மீட்டனர். பிறகு போலீசார், 4 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கானத்தூர் போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.