தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அவரது மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் சடங்குகள் செய்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’கேப்டன் செய்த தர்மம் அவரது தலையை காக்கும் என்பது போல லட்சக்கணக்கான தொண்டர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் கேப்டன் சார்பாக நன்றிகள். முதல்வர், ஆளுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
கேப்டன் நினைவிடம் பிரம்மாண்டமாக கட்டப்படும். எப்படி அவரது புகைப்படம் வைத்து 24 மணி நேரமும் விளக்கு ஏற்றப்பட்டு, தினமும் பூ அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த தொண்டர்களும் வந்து
வழிபடும் கோயிலாக மாற்ற இருக்கிறோம். கேப்டனின் லட்சியத்தை வென்று எடுப்பதுதான் எங்களுடைய நோக்கம். அவருக்கு மணிமண்டபம் கட்ட அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை” என்று கூறினார்.