திரைப்பட நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் திரைப்பட துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டும் ஆங்காங்கே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பிஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருப்பு பேஜ் அணிந்து
திருவெறும்பூர் கடை வீதியில் நேற்று ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அமைதி ஊர்வலம் சென்று பின்னர் அனைத்துக் கட்சி சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது பொதுவாழ்விலும், திரைப்பட துறையிலும், அரசியலிலும் அவர் செய்த சாதனைகளை பேசி புகழ் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் அனைத்துக் கட்சி சார்பாக 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.