தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியாக இருந்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக பேசினோம். உடனடியாக தீவுத்திடலில் இடம் ஒதுக்கி கொடுத்தார்கள்.
இறுதி பயணத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் இறுதி பயணம் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த காவல் துறைக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் ராயல் சல்யூட். அதைப்போல், 2 நாட்கள் எங்களுடனே இருந்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இறுதிச்சடங்கு தீவுத்திடலில் இருந்து தலைமை கழகம் வரை ஏறக்குறைய 14 கிலோ மீட்டர் வந்துள்ளோம். ஏற்குறைய 3 மணி நேரம் அந்த பயணம் இருந்துள்ளது. வழிநெடுக கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய பெயர், கேப்டனுக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த புள்ளி விவரங்கள்படி 2 நாட்களில் கேப்டனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என்று கூறியுள்ளனர்.
இதற்கு கேப்டன் செய்த தர்மமும், நல்ல எண்ணம், கடைசி வரை உதவி செய்த குணமும் தான். ஒட்டு மொத்த மக்களும் தெருவில் வந்து நின்று பூ தூவி சொர்க்கத்திற்கு செல்லும் வகையில் வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் கட்சி அலுவலகத்திற்குள் விடணும் என்று தான் ஆசை. அலுவலகம் சிறிய இடம் என்பதால் முடியவில்லை. முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் வந்தார்கள். அனைவருக்கும் தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல்காந்தி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இறுதி சடங்கிற்கு அவர்கள் குடும்பத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்தார். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்ல அடக்கம் நடந்துள்ளது. கேப்டனை சந்தன பேழையில் உடல் அடக்கம் செய்துள்ளோம். தலைவர் கையில் போட்டிருக்கும் கட்சி மோதிரம், கட்சி வேட்டி கடைசி வரை தலைவருடன் இருக்கட்டும் என்று அடக்கம் செய்துள்ளோம். தலைவர் கனவை நிச்சயமாக வெற்றி பெறச் செய்து வெற்றிக்கனியை அவர் காலடியில் சமர்பிப்போம்.
அன்று தான் தேமுதிகவிற்கு உண்மையான வெற்றி நாள் என்று சூளுரைப்போம். நிரந்தரமாக கேப்டனுக்கு சிறப்பான முறையில் சமாதி அமைத்து தினமும் பூ அலங்காரம் செய்து தொண்டர்கள் வழிபடும் கோயிலாக மாற்றுவோம். தலைவர் எங்கேயும் போகவில்லை, நம்முடன் தான் இருக்கிறார். ஒவ்வொருவரையும் வாழ்த்திக் கொண்டு தான் இருப்பார். தேமுதிகவினர் மற்றும் கலைத் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.