அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு உதயகுமாரை நியமித்து உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் துணைத்தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தில் ஏற்கப்படாத பதவி. எனவே அந்த பதவியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றும், இன்னொருவரை நியமிக்க வேண்டும் என்று சொல்வதும் ஏற்புடையதல்ல என விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இன்றும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, முனுசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.